வீட்டுக்கழிவுகளை திறம்பட முகாமை செய்வது எவ்வாறு?

உங்களது வீட்டில் உள்ள குப்பைக் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புக்களால் இன்றைய காலத்தில் நாம் அனைவருமே அவதியுறுகின்றோம். ஆகவே நாம் எமது வீட்டில் உள்ள கழிவுகளை திறம்பட முகாமை செய்வது தொடர்பில் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட முறைகளை கையாள வேண்டியது அவசியமானது என்பது யாராலும் மறுக்க முடியாது. திட்டமிடப்பட்ட வீட்டுக் கழிவு முகாமைத்துவத்தை கையாள்வதனால் பணமும் சேமிக்கப்படுவதுடன் ஆரோக்கியமானதொரு வீட்டுச்சூழலையும் பெற்றுக்கொள்ள முடியும். அதில் முதலாவதாக நாம் கைக்கொள்ள வேண்டியது யாதெனில் குப்பைகளை எவ்வாறு கையாள்வது, உணவுக்கழிவுகளினை என்ன செய்வது?, வீட்டுக் கழிவுகளில் மீள் பாவனைக்கு உட்படுத்தக்கூடியவை எவை? என்பவற்றைக் கண்டறிதல் வேண்டும். 

குப்பைகளின் அளவைக் குறைத்தல்


01. பிளாஸ்ரிக் பைகளுக்கு பதிலாக துணியிலான பைகளை பயன்படுத்துங்கள்: இவ்வாறு துணியிலான பைகளை பயன்படுத்துவன் ஊடாக உங்களது வீட்டில் பெருமளவிலான பிளாஸ்ரிக் கழிவுகள் குறைந்து விடும். நீங்கள் எங்கே பொருட்களை வாங்கச் சென்றாலும் மீள பயன்படுத்தக்கூடிய உங்களது துணிப்பையினை எடுத்துச்செல்வதன் ஊடாக கடைகளில் பொருட்களுக்கு தரப்படும் பிளாஸ்ரிக் பைகளில் பொருட்களை வாங்குவதற்கு பதிலாக துணிப் பையிலேயே அவற்றை வாங்கி வரலாம். நீங்கள் கடைகளுக்கு பொருட்களை வாங்கச் செல்லும் போது உங்களது துணிப்பையினை மறந்து செல்வதால் பல மீள பயன்படுத்தக்கூடிய துணிப்பைகள் சேர்வதனை தடுப்பதற்கு உங்களது துணிப்பையினை சமையலறையிலோ அல்லது மோட்டார் சைக்கிளிலோ அல்லது காரிலோ அவற்றை வைத்துக்கொள்ளுங்கள். மேலும் பொருட்களை வாங்கும் போது கடைக்காரர் இரண்டு பைகளில் அவற்றை இட்டுத்தரும் போது தனி ஒரு பையிலேயே அவற்றை வாங்க முயற்சி செய்யுங்கள். இதனால் வீட்டில் பைகளின் அளவு குறையும்.


02. குறைவான பொதியிடல் கொண்ட பொருட்களை கொள்வனவு செய்யுங்கள்: நீங்கள் ஏதாவது உணவுப்பண்டங்களை கடைகளில் வாங்கும் போது அவை மேலுறைகளால் பொதி செய்யப்பட்டு இருக்கும். இவ்வாறு பொதி செய்யப்பட்ட உணவுப்பொருட்களானது உங்கள் வீடுகளில் அதிக குப்பைகள் சேர்வதற்கு ஒரு காரணமாகிவிடும். எனவே உணவுப்பொருட்களை வாங்கும் போது குறைந்தளவில் பொதி செய்யப்பட்ட அல்லது போத்தல் போன்றவற்றில் பொதி செய்யப்பட்ட உணவுப்பொருட்களை கொள்வனவு செய்யுங்கள். விசேடமாக பிளாஸ்ரிக் பொருட்களால் சுற்றப்பட்ட அல்லது பொதி செய்யப்பட்டவற்றினை வாங்குவதனை குறைத்துக் கொள்ளுங்கள். எனவே முடியுமானவரை கடைகளில் தேவையான பொருட்களை மொத்தமாக வாங்கி கண்ணாடி அல்லது பிளாஸ்ரிக் பாத்திரங்களில் அவற்றை சேமித்து வையுங்கள். இந்த நுட்பத்தைக் கையாள்வதன் ஊடாக வீடுகளில் குப்பைகள் மலைபோல் குவிவதனை தவிர்த்துக் கொள்ள முடியும். 


03. வீட்டுக் கழிவுகளைக் கொண்டு மண்புழு உரம் தயாரித்தலில் ஈடுபடுதல்: நீங்களே உங்களது மண்புழு உரமாக்கல் அமைப்பினை தயாரித்துக் கொள்ள முடியும். மேலும் பால் பொருள்  தயாரிப்புக்களை கடைகளில் வாங்கும் போது அவை பொதி செய்யப்பட்டு வரும் கொள்கலன்களை மீள திருப்பி கொடுக்கலாம். இவ்வாறு செயவதானது பிளாஸ்ரிக் பொருட்களில் வீடுகளில் சேருவதனை தடுக்கும் ஒரு சிறந்த வழியாகும். மேலும் விவசாயிகளிடம் இருந்து பொருட்களை நேரடியாக வாங்கும் போது அவை புதியனவாகவும் அதே வேளை பிளாஸ்ரிக் பொருட்களால் பொதி செய்யப்படாதனவாகவும் இருப்பதால் பிளாஸ்ரிக் கழிவுகள் வீடுகளில் சேருவது குறைவடையும். மேலும் பிளாஸ்ரிக் கழிவுகள் இல்லாத கழிவகளைக் கொண்டு இயற்கையாக பெறக்கூடிய மண்புழு உரமாக்கல் செயற்பாடுகளில் ஈடுபட முடியும்.


04. அவசியமிருந்தாலொழிய ஏனைய சந்தர்ப்பங்ளில் போத்தலில் அடைக்கப்பட்ட பானங்கள் அருந்துவதனைத் தவிருங்கள்: போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் மற்றும் போத்தலில் அடைக்கப்பட்ட பானங்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பிளாஸ்ரிக் கழிவுகளின் அளவு அதிகரித்து வருகின்றது. சில பிரதேசங்களில் குழாய்களில் அல்லது கிணற்றில் இருந்து பெறும் நீரினை விட போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் பாதுகாப்பானதாக இருக்கின்ற போதிலும் அவ்வாறு இன்றி உங்களது பிரதேசத்தில் பெறப்படும் கிணற்று நீர் சுகாதாரமானதாக காணப்படின் போத்தலில் அடைக்கப்பட்ட நீரை பயன்படுத்தாது கிணற்று நீரையே பயன்படுத்துங்கள். அல்லது தண்ணீரை வடிகட்டிப் பாவிக்கவும். இது மிகவும் சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொள்வதற்கான சிக்கனமானதொரு முறையாகும். அல்லது போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை பெறவேண்டிய அவசியம் காணப்படின் ஒரு லீற்றர் அல்லது அரை லீற்றர் போத்தல்களை வாங்காது 20 லீற்றர் போத்தலினை வாங்குவதன் ஊடாக பல சிறிய போத்தல்களை வாங்குவதன் ஊடாக ஏற்படும் பிளாஸ்ரிக் கழிவுகளைத் தவிர்த்துக் கொள்ள முடியும்.


05. பேப்பர் பாவனையை இயன்றளவில் குறையுங்கள்: உங்களது வீட்டில் நீங்கள் கணனியை உபயோகப் படுத்துபவர்கள் ஆயின் பெரிதளவில் பேப்பர்களை பயன்படுத்த வேண்டிய தேவை குறைவடைகின்றது. நீங்கள் பெரும்பாலான கொடுக்கல் வாங்கல்களையும் ஏனைய விடயங்களையும் கணனிப் பாவனையின் ஊடாகவும் இணையப் பாவனை ஊடாகவும் மேற்கொள்வதால்  வாங்க வேண்டிய பேப்பர்களின் அளவும் குறைவடைவதுடன் அவற்றை கணனியில் இலகுவாக சேமிக்கவும் முடியும். இதனால் ஆவணங்கள் குவிந்து வீடு முழுவதும் பரவுவது தடுக்கப்படுகின்றது.

மேலும் கொடுப்பனவுகளை முடிந்தவரை பாதுகாப்பான இணையப்பக்கங்களுடாக (கொடுப்பனவுகளை இணையத்தின் ஊடாக செலுத்தும் போது இணையத்திருட்டுக்கான அபாயம் அதிகம் என்பதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே நம்பிக்கையான இணையப்பக்கங்களுடாக மட்டும் கொடுப்பனவுகளை செலுத்துவதுடன் உங்களது தனிப்பட்ட கணனியில் மட்டுமே கொடுப்பனவுகளை மேற்கொள்ளுங்கள்) செலுத்துங்கள். அத்துடன் செய்திகளை வாசிப்பதற்கு புதினப் பத்திரிகைகளைப் பயன்படுத்தாது இலத்திரனியல் ஊடகங்களை பயன்படுத்த முடியும். இவற்றைக் கைக்கொள்ளுவதன் ஊடாக வீடுகளில் பேப்பர்கள் குறைவதனை தடுக்க முடியும். 

மீளப்பயன்படுத்தலும் மீள் சுழற்சிக்கு உட்படுத்தலும்



06. உங்கள் வீடுகளில் பயன்பாடு அற்றுக் காணப்படும் பொருட்களை முடிந்த வரை ஏனையோருக்கு நன்கொடையாக வழங்க முயற்சி செய்யுங்கள்: உங்களிடம் காணப்படும் ஆடைகள், இலத்திரனியல் சாதனங்கள் அல்லது வேறு விடயங்கள் உங்களுக்கு தேவையற்று பயன்படாமல் இருக்கலாம். ஆனபோதிலும் அவை இன்னும் நல்ல நிலையிலேயே காணப்படும். அத்தகைய பொருட்களை குப்பையில் எறிவதற்கு பதிலாக தேவையுடையவர்களுக்கு நன் கொடையாக வழங்கவும். இவ்வாறு வழங்குவதன் ஊடாக அவை ஏனையோருக்கு பயன்தருவனவாக அமையும். 



07. நீடித்த பாவனையுடைய பொருட்களை மீள் பாவனைக்கு உட்படுத்தல்: நீண்ட காலப் பாவனையுடைய கொள்கலன்கள், போத்தல்கள், பெட்டிகள் போன்றவற்றை குப்பையில் இடுவதற்கு முன்பதாக முடிந்தளவு மீள் பாவனைக்கு உட்படுத்தலாம். பேப்பர் பைகள் மற்றும் கடதாசிப் பெட்டிகளைக் கூட எவ்வாறு மீள் பாவனைக்கு உட்படுத்தலாம் எனும் திட்டம் இருக்குமாயின் அவற்றைக் கூட முடிந்தளவு மீள் பாவனைக்கு உட்படுத்துவது சிறந்தது. 
  • பேப்பர் பைகளை மீள்சுழற்சிக்கு உட்படுத்த முயற்சிக்கவும். நீங்கள் அவற்றை புத்தகங்களுக்கு உறையிடப் பயன்படுத்தலாம். இல்லாவிடில் உங்களது பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு பிளாஷ் அட்டைகளாக பயன்படுத்தலாம்.
  • பேப்பர்களை பிறின்ட் செய்யம் போது அவற்றை இரண்டு பக்கமும் பிறின்ட் செய்யவும். அல்லது பிறின்ட் செய்யப்படாத மறு பக்கத்தை பிள்ளைகளுக்கான சித்திரங்களை வரைந்து காட்ட பயன்படுத்துங்கள்.
  • உணவுகள் அடைத்து வரும் போத்தல்களை பொருட்களை சேமித்து வைக்க பயன்படுத்துங்கள்.
  • பிளாஸ்ரிக் போத்தல்களை பொருட்களை சேமிப்பதற்கு பயன்படுத்துவது சிறந்தது எனினும் பல தடவைகள் அவற்றை பயன்படுத்துவது தொடாபில் அவதானமாக இருத்தல் வேண்டும். அவ்வாறு பல தடவைகள் பயன்படுத்தும் போது இரசாயனத் தாக்கங்கள் உருவாக வாய்ப்புள்ளது.


08. மீள் சுழற்சி செய்யக் கூடிய வகையில் கழிவுகளை வகைப்படுத்தவும்: பிளாஸ்ரிக், பேப்பர் கழிவுகள் மற்றும் மீள்சுழற்சிக்குட்படுத்தக் கூடிய பொருட்கள், இரும்பு மற்றும் கண்ணாடிகள் போன்றவற்றின் கழிவுகளை வௌ;வேறான குப்பைக் கூடைகளில் சேமியுங்கள். 


09. அபாயகரமான கழிவுகளை உரிய முறையில் அகற்றுதல்: வீட்டில் பாவிக்கப்படும் சில பொருட்கள் சில பொருட்கள் மீள் பாவனைக்கோ அல்லது மீள்சுழற்சிக்கோ உட்படுத்த முடியாதவையாகும். அவ்வாறான பொருட்களை அழிக்கும் போது பாதுகாப்பான முறையில் அழிக்க வேண்டும். உதாரணமாக: பற்றறிகள், பெயின்ட், தொலைக்காட்சிப் பெட்டிகள், ஏனைய மின் உபகரணங்கள் மற்றும் மின்குழிழ்கள்

கம்போஸ்டிங் (கழிவுரம் தயாரித்தல்)


10. வீட்டிலுள்ள சமையல் கழிவுகள் மற்றும் வீட்டு முற்றத்தில் உள்ள குப்பைகளை சேமியுங்கள்: வீட்டிலுள்ள சமையல் கழிவுகள் மற்றும் வீட்டு முற்றத்தில் உள்ள குப்பைகளை தூர வீசாதீர்கள். அதற்கு பதிலாக அவற்றை இயற்கை உரமாக மாற்றுவதன் ஊடாக உங்களது வீட்டுத் தோட்டத்திற்கு பசளையாக பயன்படுத்துங்கள். நீங்கள் வீட்டுத் தோட்டத்தில் ஈடுபாடு இல்லாதவராயின் அயலவருக்கு அதனை கொடுத்து உதவுங்கள். இயற்கை உரங்களை தயாரிப்பதற்கு பல வழிகள் உண்டு. சில இயற்கை உர கலவைகள் இறைச்சி மற்றும் பால் கழிவுகளை கொண்டும் தயாரிக்கலாம். சிலர் மரக்கறி மற்றும் பழக் கழிவுகளை மட்டுமே கொண்டு இயற்கை உரங்களை தயாரிக்கின்றனர். எது எவ்வாறாயினும் அடிப்படையாக எமது வீடுகளில் இயற்கை உரங்களை தயாரிப்பதற்கான ஒரு தொட்டியை வைத்திருப்பது அவசியமானது.
  • பச்சை நிறமானவை: விரைவில் உக்கும் தன்மை கொண்டவை. காய்கறி தோல்கள், புற்கள், இலைகள் போன்றவை.
  • பழுப்பு நிறமானவை (Brown): மெதுவாக உக்கும் தன்மை கொண்டவை. மரங்களின் கிளைகள், தண்டுகள், பே;பர்கள், கடதாசிப் பெட்டிகள், மரத்தூள்கள் மற்றும் முட்டைக் கோதுகள் போன்றவை.


11. இயற்கை உரம் தயாரிப்பதற்கான ஒரு தளத்தை உருவாக்குங்கள்: உங்களது வீட்டுக்கு வெளியே நன்றாக சூரிய உளி படக்கூடிய அல்லது பகுதியளவு சூரிய ஒளி படக்கூடியதான ஒரு இடத்தை இயற்கை உரம் தயாரிப்பதற்கான தொட்டியை அமைப்பதற்கான இடமாகத் தெரிவு செய்யுங்கள். அவ்வாறான இடம் இல்லாவிடில் உங்களது வீட்டு முற்றத்தின் மூலையில் ஒரு சிறிதளவு பகுதியை நீங்கள் இதற்காகப் பயன்படுத்தலாம். இயற்கை உரத்தினை தயாரிப்பதற்கான சில வழிகள் பின்வருமாறு:
  • இயற்கை உரத்தினை தயாரிப்பதற்கான தளத்தை அமைத்தல். இது ஒரு இலகுவான முறையாகும். இவ்வாறு அமைப்பதாயின் அது உங்களது வீட்டில் இருந்து தூரமாக அமைக்கப்பட வேண்டும். ஏனெனில் இவை எலிகள் மற்றும் பூச்சிகளின் தாக்குதல்களுக்கு உள்ளாகலாம்.
  • உரிய அளவுகளின் பிரகாரம் இயற்கை உரம் தயாரிப்பதற்கான தொட்டிகளை அமைத்துக் கொள்ளல்.
  • இயற்கை உரம் தயாரிப்பதற்கான கூடைகளை கடைகளில் இருந்து வாங்கிக்கொள்ளுதல். இதனை விவசாயப் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் விற்கும் கடைகளில் இருந்து பெற்றுக் கொள்ள முடியும். இது பல்வேறுபட்ட வகைகளிலும் அளவுகளிலும் கிடைக்கும்.



12. இயற்கை உரம் தயாரிக்கும் தளத்தை முகாமை செய்தல்: தொட்டியில் இடப்படும் கழிவுகள் விரைவில் உக்கும் தன்மை கொண்டவையாக இருப்பின் அதனை தடுப்பதற்கு பழுப்பு கழிவுகளை கூடுதலாக சேர்க்கவும். உங்கும் தன்மை குறைவாக இருப்பின் அதிகமாக பச்சை கழிவுகளையும் சிறிதளவு நீரினையும் சேர்ப்பதன் ஊடாக உக்கும் தன்மையினை அதிகமாக்க முடியும். குறிப்பிட்ட காலப் பகுதிக்கு ஒரு முறை கழிவுகளை கிளறி விடவும். இதனூடாக தேவையான இயற்கை உரத்தை விரைவாக உங்களின் தேவைக்கேற்ப பெற்றுக் கொள்ள முடியும்.


13. இயற்கை உரம் தயாரானதும் அதனை பயனுள்ள முறையில் பயன்படுத்துங்கள்: இயற்கை உரம் தயாரிப்பதற்காக தொட்டியில் இடப்பட்ட கழிவுகள் உக்கி உரமாக மாறுவதற்கு ஒரு மாதம் தொடக்கம் இரண்டு மாதம் வரையான காலப்பகுதி தேவைப்படலாம். உங்களது இயற்கை கழிவுகள் நன்றாக மக்கி உரமானதும் அவை மிகுந்த பழுப்பு நிறத்திலோ அல்லது கறுப்பு நிறத்திலோ காணப்படுவதுடன் அவை இயற்கையான மண் வாசனையை நுகரும் போது தருவதாக காணப்படும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட இயற்கை உரத்தை உங்களது வீட்டுத் தோட்டத்திற்கோ அல்லது பூங்கன்றுகளுக்கோ ஊட்டச் சத்து தரும் இயற்கை உரமாக நீங்கள் பயன்படுத்த முடியும்.


இன்றைய காலப்பகுதியில் முறையற்ற விதத்தில் வீட்டுக் கழிவுகளை அப்புறப்படுத்துவதனால் அது பல்வேறு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதுடன் சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் மட்டுமன்றி அனைவருக்கும் நோய்த் தாக்கங்களை ஏற்படுத்துவதுடன் ஆரோக்கியமற்ற சமுதாயம் உருவாக வழிவகுக்கும். எனவே கழிவகற்றல் மற்றும் கழிவு முகாமைத்துவம் என்பது நாட்டின் அரசாங்கத்தின் கடமை மட்டுமன்றி எமது ஒவ்வொரு தனி நபரதும் தலையாய கடமை என்பதனை உணர்ந்து ஆரோக்கியமான எதிர்காலத்தையும் நாட்டையும் கட்டியெழுப்புவதற்கு முயற்சிப்போம்.

கருத்துகள் இல்லை

All copy rights reserve by Maran - Editor. தீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.