வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் தொழிலாளர் தினப் பிரகடனம் - 2019



உலக நாகரீக வளர்ச்சிப் போக்கின் அடிப்படையில் தொழிற்துறையின் அபரிமிதமான வளர்ச்சியானது ஆச்சரியம் மிக்கதாக காணப்பட்டாலும் தொழில்துறை சார்ந்த தொழிலாளர்கள் மீதான அடக்கு முறைகளும், அவர்கள் சார் சமூகத்தின் அபிலாசைகள் அடக்கி ஒடுக்கப்படுவதும் இயல்பாகி போனதொன்றாகவே இன்று வரை காணப்படுகின்றன. இது கற்றவர்கள், கற்காதவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து மட்டங்களிலும் இருப்பதானது மிகவும் கவலைக்குரியதே. தொழிலாளர் ஒருவரிடம் இருந்து உச்ச அளவிலான பயனை பெறவேண்டும் என்பதற்காக மட்டுமல்லாது தமது முதலாளித்துவ விசுவாசத்தை வெளிக்காட்டும் விதமாக நான் உங்களின் சிறந்த அடிமைஎன்பதை நிலைநிறுத்த பாடுபடும் இடைநிலை சார்ந்தவர்கள் தமக்கு கீழே கடமையாற்றுவோரை அடக்கியாள நினைக்கும் செயற்பாடு தனியார் துறையில் மட்டுமல்லாது அரச துறையிலும் அதிகளவில் காணப்படுகிறது என்பதே நிதர்சனமான மன வருத்தத்திற்குரிய உண்மையாகும். தமது கதிரைகளை காத்துக்கொள்ளவும் அவ்வப்போது கிடைம்கும் அற்ப சொற்ப சலுகைகளை அனுபவிக்கவும் அரசியல் தலைமைகளுக்கும் முதலாளிகளுக்கும் அடிபணியும் அதிகாரிகள் இருக்கும் வரை இது தொடரத்தான் போகிறது என்றால் அது மிகையாகாது.

சிறப்பானதும், வளம் மிக்கதும், வினைத்திறன் வாய்ந்ததுமான பல்துறைசார் நிபுணத்துவம் வாய்ந்த பட்டதாரிகளை கொண்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையினைச் சேர்ந்த எமக்கு உரிய கௌரவங்களையும் அதிகாரங்களையும் வழங்கி ஊக்குவிக்க வேண்டியது அரசினதும், அரச உயர் அதிகாரிகளினதும் கடமையாகும். ஆனாலும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களைப் பொறுத்த வரையில் அரச கட்டமைப்பிலுள்ள அரச உயர் அதிகாரிகளும், நிறைவேற்றுத் தரத்தில் உள்ளவர்களும் எம்சார் கடமைகளை உரிய வகையில் செய்ய விடாமல் இடையூறு விளைவிப்பதும், அடக்கி நசுக்க முயல்வதும், உதாசீனப்படுத்துவதும் மிகவும் வேதனைக்குரியதான அன்றாட விடயமாகிவிட்டது.

நாம் எதிர்நோக்கும் பிரச்சனைகளை தொழிற்சங்க நடவடிக்கைகள் ஊடாக வெளிப்படுத்தும் போது தொடர்புடைய குறித்த அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் வெறுமனே சுற்றுநிருபங்களை கடமைக்கு வெளியீடு செய்து தமது கடமை முடிந்ததாக கருதுவது எம்மை மேன்மேலும் அதிருப்திக்கு இட்டுச் செல்வதாகவே உள்ளது. அந்த வகையில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாகிய நாம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் பின்வருமாறு;
  1. அரச நிர்வாக பதவிநிலைக் கட்டமைப்பில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடைய கல்வித் தரத்திற்கமைவான பதவிநிலை வழங்கப்படாமை.
  2. கடமைபட்டியல் வழங்கப்படாமை / பொருத்தமற்ற கடமைப் பட்டியல்கள் வழங்கப்படல் (முகாமைத்துவ உதவியாளர்களுக்கான கடமைப் பட்டியல் வழங்கப்படல்).
  3. உரிய காலப்பகுதிகளில் இட மாற்றங்கள் மேற்கொள்ளப்படாமை.
  4. பதவியுயர்வுக்கான சந்தர்ப்பங்கள் இன்மை.
  5. தடை தாண்டல் பரீட்சைகள் உரிய காலப்பகுதிகளில் இடம்பெறாமையும் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதில் உள்ள தாமதமும்.
  6. அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு உரித்தான கொடுப்பனவுகளும், மேலதிக படிகளும் வழங்கப்படாமை.
  7. தகமையற்ற மேற்பார்வையாளர்களை நியமித்தல் (உதாரணமாக: சீரேஷ்ட முகாமைத்துவ உதவியாளரின் மேற்பார்வையின் கீழ் அமர்த்துதல்).
  8. பதவிக்கான வெற்றிடங்களை நிரப்பும் நடைமுறைகளில் உள்ள பாரபட்சம் (ஒரு வருட பயிற்சி தரம்).
  9. ஒழுங்கமைக்கப்படாத சேவைப்பிரமாணக் குறிப்பு.
  10. அழுத்தங்கள் நிறைந்த அலுவலகச்சூழலும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை நசுக்க முயலும் மேலதிகாரிகளும்.
  11.   உரிய காலப்பகுதியில் மேற்கொள்ளப்படாத தரமுயர்வுகள்.
  12. அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் உரிய தரப்பினருக்கு முன்வைக்கும் போது பாரா முகமும், பாரபட்சமும், அக்கறையற்றும் செயற்படும் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களும் மற்றும் அரச உயர் அதிகாரிகளும்.

அவ்வகையில் மேலே குறிப்பிட்டப்பட்டது போன்ற பல்வேறுபட்ட நிர்வாக, உள மற்றும் பொருளாதார ரீதியான இன்னல்களை நாம் எதிர்நோக்கி வருகின்றோம். இது தொடர்பாக அரசு விசேட கவனம் செலுத்தி வினைத்திறனானதும், விளைதிறன் மிக்கதுமான சேவைகளை எமது நாட்டின் பொதுமக்களுக்கு ஆற்றும் வகையிலான நிறுவனச் சூழலை ஏற்படுத்தி தருவதற்கு முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். அத்துடன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான நாம் பொதுமக்களின் நலன்சார்ந்த நம் கடமைகளை செவ்வனே செய்வதன் ஊடாக எம் மீதான அடக்குமுறைகளை தகர்த்தெறிய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அனைவரையும் ஒன்றிணையுமாறு சர்வதேச தொழிலாளர் தினமான மே முதலாம் திகதியாகிய இன்றைய தினத்தில் கேட்டு நிற்கின்றோம்.

பொதுமக்களின் நலன் சார்ந்த நம் கடமைகளை செவ்வனே செய்வதன் ஊடாக எம் மீதான அடக்குமுறைகளை தகர்த்தெறிவோம்

நன்றி

வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம்.

DOWNLOAD AS PDF: CLICK HERE

கருத்துகள் இல்லை

All copy rights reserve by Maran - Editor. தீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.