நீங்கள் போட்டிப் பரீட்சைகளில் வெற்றிபெற உங்களது கற்றலினை திட்டமிடுவது எவ்வாறு?
சிறந்த திட்டமிடல் இன்றி எழுமாற்றாக கற்பது என்பது எதிர்மறையான விளைவுகளை உருவாக்கக் கூடிய தவறாகும். பொதுவாக போட்டிப்பரீட்சைக்கு தோற்றும் பெரும்பான்மையானோர் இத்தவறை விடுகின்றனர். இதுவே பெரும்பாலானோர் போட்டிப்பரீட்சைகளில் தோல்வியடைய காரணமாகின்றது. உங்களது கற்றலினை ஒழுங்குபடுத்துவதற்கு கற்றல் திட்டமிடல்கள் மிக மிக அவசியமானது. இதற்காக நீங்கள் எதனைக் கற்பது மற்றும் அதனை எவ்வாறு கற்பது என்பதனை திட்டமிடுதல், கற்பதற்கான முன்னுரிமைத் தெரிவுகளை வரிசைப்படுத்தல் ஆகியன உங்களை மேலும் வெற்றியினை முன்நோக்கி இட்டுச் செல்லும். தொடர்ந்து நாம் எவ்வாறு போட்டிப் பரீட்சைக்கான திட்டமிடல்களை மேற்கொள்ளலாம் என்பது தொடர்பில் பார்க்கப்போகின்றோம்.
ஒவ்வொரு நாளும் மீட்டுப்பார்த்தல். நீங்கள் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒன்றினை நீங்கள் போட்டிப் பரீட்சைக்கு தயார்படுத்தச் செல்லும் வகுப்புக்களிலோ அல்லது உங்களது சுய தேடலின் போதோ கற்றுக் கொண்டிருப்பீர்கள். ஒவ்வொருநாளும் நீங்கள் வீட்டுக்குச் சென்ற பின்னர் அன்றைய தினம் கற்ற விடயங்களினை அன்றைய தினமே மீட்டுப்பாருங்கள்.
மீட்டுப்பார்த்தல் அல்லது நினைவுபடுத்தல்: குறித்த வாரம் முழுவதும் படித்ததினை வார இறுதி நாட்களில் மீட்டுப்பார்த்தல்.
எதனை முதலாவதாக கற்றுக்கொள்ளப் போகின்றீர்கள் அல்லது எதனை முதலில் கற்றுக் கொள்ளவேண்டும் என்பதனை வரிசைப்படுத்திக் கொள்ளுங்கள்.
ஒவ்வொரு பாடப்பரப்பினையும் கற்றுக்கொள்ள எவ்வளவு நேரம் தேவைஎன்பதனை பாடப்பரப்பின் முக்கியத்துவம் மற்றும் உங்களது குறித்த பாடப்பரப்பு மீதான அறிவு என்பவற்றினை அடிப்படையாக கொண்டு தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
ஒவ்வொரு பாடப்பரப்பிற்கும் முன்னுரிமைப் பட்டியலைத் தயார்செய்யவும். உதாரணம்: அவசரமானது, பின்னர் இறுதியாக பார்த்துக் கொள்ளலாம்.
மேன்மேலும் தேடுங்கள். மேலும் தகவல்களை பெறவும் உங்களுக்கு சந்தேகமான பாடப்பரப்புக்களை தெளிவுபடுத்தவும் நூலகங்களுக்குச் செல்லுங்கள் அல்லது இணையத்தில் தேடுங்கள்.
கடந்தகால வினாத்தாள்களை பயிற்சி செய்து பாருங்கள். போட்டிப்பரீட்சைக்குத் தோற்றும் சிலர் அல்லது ஏற்கனவே தோற்றியோர் குறித்த போட்டிப்பரீட்சை தொடர்பான வினாத்தாள்களினை சேகரித்து வைத்திருப்பார்கள். தற்போது பெரும்பாலும் இவை முகப்புத்தகத்தி;ல் (FACEBOOK) பகிரப்பட்டு வருகின்றன. அந்த முகநூல் பக்கங்களில் நீங்களும் இணைந்திடுங்கள்.
தினமும் கற்பதற்காக ஒரு சில மணிநேரங்களினை ஒதுக்குங்கள். ஒவ்வொரு நாளும் இவ்வாறு படிப்பது உங்களது மூளையினுடைய செல்களினை மிகவும் செயல்திறன் மிக்கதாக பேணுவதற்கு உதவும். சில பக்கங்களையோ அல்லது குறித்த ஒரு பக்கத்தினையோ படித்து முடித்த பின்னர் கற்றவிடயங்களினை புத்தகத்தினையோ அல்லது குறிப்புக்களையோ பார்க்காது ஒரு தொகுப்பாக எழுதிக்கொள்ளுங்கள்.
உங்களுக்கு இந்த கட்டுரை பிடித்திருந்தால் கீழே உங்களது கருத்துக்களை பதிவிடுங்கள் .
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக