வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சார்பில் வட மாகாண கல்வி அமைச்சுக்கு ஒரு பகிரங்க வேண்டுகோள்
வட மாகாண கல்விப் போக்கு தொடர்பில் அதிகளவு விமர்சனங்கள் தற்போது எழுகின்றமை தாங்கள் அறிந்ததே. வட மாகாணத்தினுடைய கல்வித் திணைக்களங்களில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு முகாமைத்துவ உத்தியோகத்தர்களுக்கான கடமைகளினை கையளித்தல் தொடர்பில் வட மாகாண கல்வித் திணைக்களம், வட மாகாண கல்வி அமைச்சு, பிரதம செயலாளர் போன்றோருக்கு பல தடவைகள் அறியத் தந்திருந்த போதிலும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்பது மிகவும் வருத்தமளிக்கும் செயலாகவும் தங்களது வட மாகாண கல்வி தொடர்பான அக்கறையற்ற போக்கினை வெளிப்படுத்துவதாகவும் அமைகின்றது.
வட மாகாணக் கல்வித் திணைக்களம் மற்றும் வலயக்கல்வி அலுவலகங்களில்
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் பயிலுனர்
தரத்தினை சேர்ந்த 169 இற்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்கள்
கடமையாற்றுகின்ற போதிலும் எமக்கு பொருத்தமான கடமைப்பட்டியல்களை வழங்காது
முகாமைத்துவ உதவியாளருக்கு உரித்தான கடமைகளை வழங்குவதனால் அபிவிருத்தி
உத்தியோகத்தர்கள் ஆகிய நாம் மிகுந்த மன உழைச்சலுக்கு உள்ளாவதோடு எமது அலுவலக
கடமைகள் தொடர்பில் திருப்தியற்றும் காணப்படுகின்றோம்.
அத்துடன் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையினைப் பொறுத்தவரை ஏனைய
சேவைகளைப் போல் அன்றி அனைவரும் பட்டதாரிகளாக உள்ள போதிலும் ஒரு வருட பயிற்சி
காலத்தினை ரூபா 10,000.00 மட்டும் ஊக்குவிப்புத் தொகையாக பெற்றுக் கொண்டு
எமது சேவையினை மேற்கொண்டுள்ளோம். இக்குறிப்பிட்ட ஒரு வருட காலப்பகுதியினை பல்வேறுபட்ட
பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே பூர்த்திசெய்துள்ளோம். பட்டதாரிப்
பயிலுனர்களில் பெரும்பாலானோர் திருமணம் முடித்தவர்களாகவும் குடும்பச் சுமையினை
சுமப்பவர்களாக இருந்தனர். இக்குறிப்பிட்ட காலப்பகுதியில் பொருளாதார நெருக்கடிகளினை
சமாளிப்பதற்கு எம்மில் பலர் கடனாளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. மேலும்
இப் பயிலுனர் சேவைக்காலத்தில் மட்டுமன்றி எமது பல்கலைக்கழக கல்வியினைக் கூட நாம்
பல்வேறு பொருளாதார இன்னல்களுக்கு மத்தியிலேயே தொடர்ந்திருந்தோம். இவ்வாறான பல
நெருக்கடிகளுக்கு மத்தியில் பணிபுரியும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு உரிய
கௌரவங்கள் மற்றும் உரிமைகள் எமக்கு கிடைக்க வேண்டும் என கோருவதில் உள்ள நியாயங்களை
தாங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என எதிர்பார்க்கின்றோம்.
மேலும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு முகாமைத்துவ
உதவியாளர்களது கடமைகளை வழங்க வேண்டாம் என செயலாளர் - அரசாங்க நிர்வாக, உள்நாட்டலுவல்கள்
மற்றும் நீதி அமைச்சு அவர்களினால் 14/2013 இலக்க 2013.07.04 திகதிய மற்றும் CS/DOS/21/01/02 இலக்க 2017.04.19திகதிய கடிதத்தின் ஊடாகவும் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சினுடைய
செயலாளரது HAF1/12/GR இலக்க 14.08.2017 ஆம் திகதிய கடிதத்தின் ஊடாகவும் பிரதிப் பிரதம செயலாளர் – நிர்வாகம் (வட மாகாணம்) அவர்களது NP/02/08/PA/Grievance இலக்க 01.06.2017 ஆம் திகதிய கடிதத்தின் ஊடாகவும் பல தடவைகள்
திணைக்களத் தலைவர்களுக்கு அறியத்தந்திருந்த போதிலும் குறித்த சுற்றுநிருபங்கள்
தொடர்பில் அக்கறையற்று தொடர்ந்தும் வட மாகாண கல்வித்திணைக்களமும் வலயக்கல்வி
அலுவலகங்களும் முகாமைத்துவ உதவியாளர்களுக்கான கடமைகளையே அபிவிருத்தி
உத்தியோகத்தர்களுக்கு வழங்கி வருகின்றன.
வட மாகாணத்தினை சேர்ந்த பல்வேறு உயர் மட்ட அரச அதிகாரிகளுக்கு இது
தொடர்பில் தெரியப்படுத்தியிருந்த போதிலும் எவ்வாறான நடவடிக்கைகளும்
மேற்கொள்ளப்படவில்லை. வட மாகாண கல்வி அமைச்சிற்கு
தகவலறியும் உரிமைச் சட்டத்தினூடாக இது தொடர்பில் தெரியப்படுத்தப்பட்ட போது 01.01.2016 ஆம் திகதி முதல் 3088 எண்ணிக்கையான ஆசிரியர்கள் வட மாகாணத்தில்
நியமிக்கப்பட்டதாகவும் அவர்கள் தொடர்பான சுயவிபரக்கோவைகள், சம்பளங்கள்
மற்றும் கல்வி அபிவிருத்தி, பௌதீக வளச் செயற்பாடுகளைக் கையாள்வதற்கு
முகாமைத்துவ உதவியாளர்கள் போதாமல் உள்ளமையினால் குறித்த செயற்பாடுகளை சீராக கொண்டு
செல்வதற்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் முகாமைத்துவ உதவியாளர்களின் கடமைகளுக்காக
ஈடுபடுத்தப்படுகின்றனர் என பதிலளிக்கபப்ட்டிருந்தது. மேற்படி பதிலானது ஒரு
பொருத்தமற்றதும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை மேலும் அதிருப்திக்கு உள்ளாக்குவதாக
உள்ளது. ஏனெனில் 300சுயவிபரக்கோவைகளை
ஒரு முகாமைத்துவ உதவியாளர் கையாள முடியும். அவ்வாறிருக்க 169 உத்தியோகத்தர்களை 3088 ஆசிரியர்கள் தொடர்பிலான செயற்பாடுகளை சீராக
கொண்டு செல்வதற்கு பயன்படுத்துவது பொருத்தமற்றது என்பதனை தங்களது மேலான
கவனத்திற்கு கொண்டு வர விரும்புகின்றோம். எது எவ்வாறாயினும் முகாமைத்துவ உதவியாளருக்கான
பற்றாக்குறையினை நிவர்த்தி செய்வதற்காக அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான
சிறப்புரிமைகளை மறுத்து முகாமைத் உதவியாளர்களின் கடமைகளில் ஈடுபடுத்துவது என்பது
அபிவிருத்தி உத்தியோகத்தராகிய எமது சிறப்புரிமைகளை மீறும் செயலாக நாம்
உணர்கின்றோம்.
மேலும் வடமாகாணத்திலுள்ள வலயக்கல்வி அலுவலகங்களில் இருந்து தகவல்
அறியும் சட்டத்தினூடாக பெற்றுக்கொண்ட உத்தியோகபூர்வ தகவல்களின் அடிப்படையில்
அனைத்து வலயக்கல்வி அலுவலகங்களிலும் முகாமைத்துவ உதவியாளர்களின் கடமைப்பட்டியலே
அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படுகின்றது. மேலும் பல வலயக்கல்வி
அலுவலகங்களில் முகாமைத்துவ உதவியாளர்களது கடமைகள் எவை? அபிவிருத்தி
உத்தியோகத்தர்களது கடமைகள் எவை தொடர்பில் புரிந்து கொள்ளல் இன்றிக்
காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். பொது எழுதுவினைஞர் சேவை, அரச
தட்டெழுத்தாளர் சேவை, அரச சுருக்கெழுத்தாளர் சேவை, அரச
கணக்குப் பதியுனர் சேவை, அரச சிறாப்பர் சேவை மற்றும் அரசாங்க
களஞ்சியப்பொறுப்பாளர் சேவை ஆகிய சேவைகளுக்கு உரித்தாகக் காணப்பட்ட பணிகளை
மேற்கொள்ளும் பல்பணிச் சேவையொன்றாக அரசாங்க முகாமைத்து உதவியாளர் சேவை
காணப்படுகின்றது. அதே வேளை அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைப் பிரமாணக் குறிப்பின்
அடிப்படையில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான கடமைகளாக அரசினால்
செயற்படுத்தப்படும் அபிவிருத்தி கருத்திட்டங்கள் தொடர்பான கடமைகளான புலன்விசாரணை, தகவல்
மற்றும் தரவு சேகரிப்பு, தரவுப் பகுப்பாய்வு, அறிக்கை
தயாரித்தல் மற்றும் கணக்கெடுப்புக்கள் போன்ற கடமைகள் காணப்படுகின்றன.
மேலும் EST7/ALLOW/03/2014 திகதிய 2017.12.07 ஆம் திகதிய 33/2017 ஆம் இலக்க அரசாங்க சுற்றறிக்கைக்கு அமைவாக
அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதான கள அலுவலராக காணப்படுகின்ற போதிலும் வலயக்கல்வி
அலுவலகங்களில் முகாமைத்துவ உதவியாளாருக்கான கடமைகளிலேயே ஈடுபடுத்தப்படுகின்றனர்.
மேலும் அது தொடர்பில் தகவல் அறியும்
சட்டத்தினூடாக கேட்கப்பட்ட விளக்கத்திற்கு பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக்
கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள் ஆகியோர் வெளிக்களப் பணிகளில்
ஈடுபடுத்தப்படுவதால் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வெளிக்களக் கடமைகளில்
ஈடுபடுத்தப் படுவதில்லை என குறிப்பிடப்படுகின்றது. கல்விச் செயற்பாடுகள் தொடர்பாக
விசேட நிபுணத்துவம் பெற்ற மேற்படி ஆளணியினர் கல்வி அபிவிருத்தி தொடர்பான
வெளிக்களப் பணிகளுக்கு ஈடுபடும் போது கல்வித்துறை மேம்பாட்டிற்காக ஏனைய சமூகம்
சார் வெளிக்களப் பணிகள் பலவற்றில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஈடுபட வேண்டிய
அவசியம் உள்ளது அவ்வாறான பணிகள்
சிலவற்றினை பின்வருமாறு குறிப்பிடலாம்.
01. பாடசாலைக்கும் கிராம மட்ட நிறுவனங்கள் மற்றும்
கிராம மட்ட அரச அதிகாரிகளுக்கும் இடையிலான தொடர்பினை மேம்படுத்தும் வகையில்
செயற்படல்.
02. பாடசாலைகளுக்கான பௌதீக வளத் தேவைகளை
இனங்காணுதலும் அவை தொடர்பில் வலயக்கல்விப் பணிப்பாளருக்கு தெரியப்படுத்தலும்.
03. பாடசாலைகளில் மேற்கொள்ளப்படும் கட்டுமானம்
மற்றும் சிறு திருத்தங்கள் தொடர்பிலான முன்னேற்றங்களை கண்காணித்தலும் அவை
தொடர்பிலான அறிக்கையிடலும்.
04. பாடசாலைக்கு வெளியோன சமூக ரீதியான கற்றல்
செயற்பாடுகளை மேம்படுத்தும் வகையிலான சமூகச் செயற்பாடுகளை மேற்கொள்ளல். (வாசிப்பு
போட்டிகளை நடாத்துதல், வாசிப்பு முகாம்களை ஏற்பாடு செய்தல்)
05. பெற்றோர்களுக்கான விழிப்புணர்வுச்
செயற்பாடுகளையும் பெற்றோர் சந்திப்புக்களையும் மேற்கொள்ளல்.
06. பாடசாலை இடை விலகல் மற்றும் வரவு ஒழுங்கீனம்
உடைய பிள்ளைகளின் வரவுகளை மேம்படுத்தும் வகையிலான வீட்டுத்தரிசிப்புக்களை
மேற்கொள்ளுதல்.
07. பாடசாலைகளில் நிலவும் பௌதீக தேவைகளை இனங்கண்டு
அவை தொடர்பான திட்ட முன்மொழிவுகளை தயாரித்தல்.
08. திட்ட முன்மொழிவுகளை செயற்படுத்தும் வகையில்
பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கிராம சேவையாளருடன் இணைந்து
நிதிக்கான மூலங்களை கண்டறிதலும் அமுல்படுத்தலும்.
09. வறிய மாணவர்களை இனங்கண்டு அவர்களுடைய
குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகளை பெற்றுக் கொடுப்பதற்கான மூலங்களை கண்டறிந்து
அவற்றைப் பெற்றுக்கொடுப்பதன் ஊடாக பிள்ளையின் போசாக்கினை மேம்படுத்துவதுடன்
பொருத்தமான கற்றல் சூழல்களை வீடுகளில் ஏற்படுத்திக் கொடுப்பதன் ஊடாக மாணவர் அடைவு
மட்டங்களை மேம்படுத்தல்.
10. முறை சாரா கல்விப் பிரிவுடன் இணைந்து பாடசாலைக்
கல்வியினை நிறைவு செய்து கொண்ட மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் மற்றும் தொழில்
பயிற்சி போன்றவற்றிற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொள்ளல்.
11. பாடசாலையில் மட்டுமன்றி சமூக மட்டத்திலும்
பிள்ளைகளின் கற்றலினையும் வாசிப்பினையும் மேம்படுத்தும் பிரதேச சபைகளின் சமூக
அபிவிருத்தி உத்தியோகத்தருடன் இணைந்து சனசமூக நிலையங்களை உருவாக்குதலும் அவை தொடர்பான
செயற்பாடுகளை ஊக்குவித்தலும்.
12. பாடசாலை சுற்றுச் சுழலிலுள்ள அனர்த்த அபாயங்களை
கண்டறிதலும் அது தொடர்பில் அறிக்கையிடல் மற்றும் அனர்த்த முகாமைத்து
விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகளில் ஈடுபடுதல்.
13. பாடசாலைகளுக்கான உள்ளகக் கணக்காய்வு நடவடிக்கைகளில்
வலயக் கல்வி அலுவலகம் சார்பாக ஈடுபடுதல்.
எனவே பின்வரும் வியடங்கள் தொடர்பில் அபிவிருத்தி உத்தியோகத்தர்
சேவையிலுள்ள வலயக் கல்வி அலுவலகங்களில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்
தொடர்பில் அவர்களது சேவையினை திருப்திகரமாக மேற்கொள்ளும் வகையில் ஆவன செய்து
தருமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
01. அபிவிருத்தி உத்தியோகத்தர்களை பயிற்சி தரத்திற்கு உள்வாங்கும் போது
அவர்களுக்கான ஒழுங்குபடுத்தப்பட்ட சுழற்சிமுறை பயிற்சி அட்டவணைக்கு அமைய
பயிற்சிகள் வழங்கப்படுவதுடன் குறித்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பதவி நிலை
உத்தியோகத்தரினால் மாத்திரமே மேற்பார்வை செய்யப்படுதல்.
02. வெவ்வேறு சேவையினைச் சேர்ந்த கள உத்தியோகத்தர்கள் இருப்பினும்
அபிவிருத்தி உத்தியோகத்தர் என்பவர் ஒரு கள உத்தியோகத்தர் என்ற வகையில் அபிவிருத்தி
உத்தியோகத்தருக்கான வெளிக்களக் கடமைகள் கட்டாயமாக ஒதுக்கப்படல்.
03. EST7/ALLOW/03/2014 திகதிய 2017.12.07 ஆம் திகதிய 33/2017 ஆம் இலக்க அரசாங்க சுற்றறிக்கைக்கு அமைவாக
வெளிக்களப் படியான மாதாந்தம் ரூபா 300.00 அனைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் பெறுவதற்கு ஆவன செய்தல்.
04. அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அனைவரும் பதவிநிலை உத்தியோகத்தர்
ஒருவரின் மேறபார்வையின் கீழ் மாத்திரமே கடமைகளை மேற்கொள்ளல்.
05. அலுவலக கடமைகளில் ஈடுபடுத்துவதாக இருப்பின் பொருத்தமான பணிகளில்
மட்டுமே பணி அமர்த்தப்படுதல்.
06. வலயக்கல்வி அலுவலகங்களின் முன்னேற்ற அறிக்கைகளை இற்றைப்படுத்தல்
பணி அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு வழங்கப்படுவதாக குறிப்பிடப்படுகின்ற போதிலும்
வெறுமனே எவ்வித நேரடி கள தரிசிப்பும் இன்றி ஏனையோரால் குறிப்பிடப்படும் பௌதீக
முன்னேற்றங்களை தட்டச்சு செய்யும் பணியே அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு
வழங்கப்படுகின்றது. இது முற்றாக தவிர்க்கப்படுதல்.
07. கடமைப்பட்டியல் வழங்கப்படும் போது அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு
பெயரளவில் கடமைகளை வழங்காது உரிய கடமைகள்வழங்கப்படுதல்.
08. கல்வி அபிவிருத்திக் கூட்டங்களுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்
உள்வாங்கப்படல்.
09. அவசரகால நிலை தவிர்ந்த ஏனைய சந்தர்ப்பங்களில் அபிவிருத்தி
உத்தியோகத்தருக்கு ஏனைய சேவைகளின் கடமைகளை வழங்காமல் இருத்தல்.
நன்றி
வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்
சங்கம்
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக