வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் மற்றும் வட மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்புத் தொடர்பானது


வட மாகாணத்தில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் வட மாகாணத்தினுடைய கௌரவ ஆளுநர் கலாநிதி. சுரேன் இராகவன் அவர்களுக்கு தெரியப்படுத்தும் முகமாக வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கமானது ஆளுநர் சந்திப்பிற்கான நேரம் ஒன்றினை ஒதுக்கித் தருமாறு வட மாகாண ஆளுநரிடம் கோரியிருந்தது. அதற்கமைவாக, கடந்த 26.03.2019 ஆம் திகதி அன்று பிற்பகல் 05:30 மணியளவில் மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தினருடைய பிரதிநிதிகளுக்கும் வட மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு வட மாகாண ஆளுனர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன் போது வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பிலான கடிதம் ஒன்று வட மாகாண ஆளுநர் அவர்களிடம் கையளிக்கப்பட்டதோடு வட மாகாண ஆளுநர் கௌரவ.கலாநிதி.சுரேன் இராகவன் அவர்களுக்கும் வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தினருக்குமிடையில் வட மாகாணத்தில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடைய நிலை தொடர்பில் மிகுந்த கரிசனையோடும் மிகவும் யதார்த்தபூர்வமாகவும் பேசிய கௌரவ ஆளுநர் அவர்கள், தான் இவ் ஆளுநர் எனும் பதவியில் இருக்கின்ற காலப்பகுதிக்குள் செய்ய வேண்டிய முக்கிய கடமைகளினை முன்னுரிமை அடிப்படையில் நோக்குகின்ற போது, பொதுமக்களுக்கான பெருமளவிலான கடமைகளை தன்னால் இயன்றவரை செய்ய வேண்டியதாக இருப்பதனால் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் அனைத்துப்  பிரச்சனைகளுக்கும் தீர்வு பெற்றுத் தருவதற்கு இயலாத நிலையில் தான் இருக்கின்றபோதிலும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொடர்பான பிரச்சனைகளில் மிக முக்கிய பிரச்சனையாக உள்ள இடமாற்றம் தொடர்பிலான பிரச்சனைக்குத் தீர்வினைப்  பெற்றுத்தருவதற்கு தேவையான விடயங்களினை செய்வதாகவும், அபிவிருத்தி உத்தியோகத்தர்களது இடமாற்றம் தொடர்பிலான கொள்கை வரைபு ஒன்றினை தயாரித்து வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் தரும் பட்சத்தில் அதனை அங்கீகரிக்கப்பட்டதொரு இடமாற்றக் கொள்கையாக அங்கீகரிப்பதற்குரிய நடவடிக்கைகளினை எடுப்பதாக தான் உத்தரவாதம் அளிப்பதாகக் கூறினார்.

அத்தோடு அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை என்பது ஏனைய அரச சேவைகளோடு ஒப்பீட்டளவில் நோக்குகின்ற போது புதியதொரு அரச சேவை என்ற காரணத்தினால் உரிய கௌரவங்களையும் உரிமைகளையும் மற்றும் அங்கீகாரங்களையும் போராடியே அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பெற வேண்டிய சூழ்நிலை உள்ளது எனவும் அபிவிருத்தி உத்தியோகத்தருக்கென பிரத்தியேகமான உரிமைகளினையும் கௌரவங்களினையும் பெற்றுக் கொள்வது என்பது அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கைகளிலேயே தங்கி உள்ளது எனவும் கூறினார். 

அந்த வகையில் வட மாகாண கௌரவ ஆளுநருடன் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு அமைவாக வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தினால் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்குரிய பிரத்தியேகமானதொரு இடமாற்றக் கொள்கைக்கான முன்மொழிவு வரைபு தயாரிக்கப்பட்டு விரைவில் கௌரவ வட மாகாண ஆளுநர் அவர்களது  மேலான நடவடிக்கைக்காக வட மாகாண ஆளுநர் செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. 

கருத்துகள் இல்லை

All copy rights reserve by Maran - Editor. தீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.